அரசு ஊழியர்கள் புதன்கிழமை தோறும் அலுவலகத்திற்கு சைக்கிளில் வர வேண்டும்-கலெக்டர் அனிஷ்சேகர் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் புதன்கிழமை தோறும் அலுவலகத்திற்கு சைக்கிளில் வர வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிள் பயன்படுத்த கூடாது என்றும் கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்து உள்ளார்.

Update: 2022-03-05 21:27 GMT
மதுரை
அரசு ஊழியர்கள் புதன்கிழமை தோறும் அலுவலகத்திற்கு சைக்கிளில் வர வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிள் பயன்படுத்த கூடாது என்றும் கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உடல் பாதுகாப்பு
காற்று மாசு, பெரும் சுற்றுச்சூழல் ஆபத்தை உண்டாக்குகிறது. அதனால் உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில், 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
வாகனங்களை இயக்கும்போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இந்த சுகாதாரக்கேடு சுவாச அமைப்பிற்கு லேசானது முதல் கடும் எரிச்சலையும், தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது.
சைக்கிளில்...
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், காற்று மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் முதல் முயற்சியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் (புதன்கிழமை) என கடைபிடித்து வருகிறது. அதன்படி தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டு அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமையன்று பொது போக்குவரத்து அல்லது நடந்து வருதல் அல்லது சைக்கிள்-மின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுலகத்திற்கு வருகிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் வாரந்தோறும் புதன்கிழமையன்று தனிநபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பொது போக்குவரத்து மூலமோகவோ, நடந்தோ, சைக்கிள் மூலமாகவோ அலுவலகத்திற்கு வரவேண்டும். மேலும் தங்களது அலுவலகங்களுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவரும் அதனை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். இது ஒரு சிறுபடி என்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் தொடக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்