அய்யங்குளத்தில் குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் தஞ்சை அய்யங்குளத்தில் குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்;
வேலை கிடைக்காத விரக்தியில் தஞ்சை அய்யங்குளத்தில் குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி
தஞ்சை மேலவீதி பாலோப்பசந்து பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மகன் ராஜசேகர் (வயது32). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் படித்து முடித்து பல ஆண்டுகளாகியும் வேலை கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஒரு கல்வி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்து வந்தார்.
ஆனால் அந்த வேலையும் கிடைக்காததால் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜசேகர் நீண்டநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் அவரை பெற்றோர்களும், உறவினர்களும் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
குளத்தில் பிணமாக மிதந்தார்
நேற்றுமாலை தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யங்குளத்தில் வாலிபர் ஒருவர் தலைகுப்புற கிடந்த நிலையில் பிணமாக மிதப்பதை நடைபயிற்சிக்கு சென்ற சிலர் பார்த்தனர். உடனே இது குறித்து தஞ்சை மேற்கு போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அய்யங்குளத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் இறங்கி, தண்ணீரில் மிதந்த வாலிபர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் விசாரித்தபோது, காணாமல் போன ராஜசேகர் என்பது தெரியவந்தது. அவரது பெற்றோரும், நண்பர்களும் ராஜசேகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து ராஜசேகர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தியபோது, வேலை கிடைக்காத விரக்தியில் அய்யங்குளத்தில் குதித்து ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.