உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும்-உயிர் தப்பி வந்த மாணவி பேட்டி

போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்று உயிர்தப்பி ராமநாதபுரம் வந்த மாணவி கூறி உள்ளார்.

Update: 2022-03-05 19:26 GMT
ராமநாதபுரம், 

போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்று உயிர்தப்பி ராமநாதபுரம் வந்த மாணவி கூறி உள்ளார்.

ராமநாதபுரம் மாணவி மீட்பு

ரஷியா-உக்ரைன் இடையே போர் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வகையில் மத்திய அரசு ஆபரேசன் கங்கா என்ற பெயரில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் படிப்படியாக மீட்டு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் சூரங்கோட்டை அருகே கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதிகளான சரவணன் - விஜயலட்சுமி ஆகியோரின் மகள் ஸ்வேதா (வயது 20) என்பவர் போர் நடந்து வரும் நிலையில் அங்கிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் உயிர் தப்பி சொந்த ஊருக்கு வந்துள்ளார். 
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:-
 உக்ரைன் நாட்டில் உஸ்ரோட் மாநிலத்தில் உள்ள நேஷனல் பல்கலைக்கழகத்தில் நாங்கள் மருத்துவம் பயின்று வந்தோம். இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் ஏற்பட்ட நிலையில் நாங்கள் அனைவரும் செய்வதறியாது தவித்து வந்தோம். எங்கு பார்த்தாலும் ஆம்புலன்சு சத்தங்களும் குண்டுகள் வெடிக்கும் சத்தமும் எங்களை நிலைகுலையச் செய்தது. இதன் காரணமாக நாங்கள் தப்பித்தால் போதும் என்று பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழியில் சென்று தங்கினோம். 

இந்திய மாணவர்களை மீட்க வேண்டும்

உயிர் பிழைத்தால் போதும் என்று இருந்தோம். அங்கு சாப்பிடக்கூட வழியில்லை குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. எப்போது வெளியேறுவோம் சொந்த ஊருக்குச் செல்வோம் என்று தவியாய் தவித்து வந்தோம்.ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து சொந்த ஊருக்கு வந்தது நிம்மதி அளிக்கிறது. இன்னும் ஏராளமான மாணவர்களும், இந்தியர்களும் மரண பீதியுடன் அங்கு தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தற்போது போர் நிறுத்தம் தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும்.  இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் செய்திகள்