பட்டுப்போன மரம் அகற்றம்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் நின்றிருந்த பட்டுப்போன மரம் வெட்டி அகற்றப்பட்டது.

Update: 2022-03-05 19:22 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் நெடுஞ்சாலையில் பழமையான மரம் ஒன்று இருந்தது. தூங்கு மூஞ்சி வாகை இன மரமான இந்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. அரசு ஆஸ்பத்திரி மற்றொரு நுழைவுவாயில் பகுதியில் வளர்ந்திருந்த இந்த பழமையான மரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று பட்டுப்போனது. இதன்பின்னர் இந்த மரம் தழைக்கவில்லை. இந்நிலையில் நாளுக்கு நாள் இந்த மரம் உடைந்து வலுவிழந்து முறிந்து விழும் நிலைக்கு சென்றது. முக்கிய சாலை பகுதியில் எப்போது விழும் என்ற நிலையில் இருந்த இந்த பழமையான மரம் பேராபத்தை விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரன் உத்தரவின்பேரில் சாலை ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான பணியாளர்கள் நேற்று அந்த மரத்தினை அகற்றினர். வேரோடு அந்த மரத்தை அறுத்து எடுத்து அப்புறப்படுத்தினர். இதன்மூலம் நீண்டகாலமாக பேராபத்தை விளைவிக்கும் வகையில் சாலையில் ஆபத்தான நிலையில் நின்றிருந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்