நாகர்கோவிலில் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிடம் ரூ.7¾ லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் என்ஜினீயரிடம் ரூ.7¾ லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்,
ஆன்லைன் மூலம் என்ஜினீயரிடம் ரூ.7¾ லட்சம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர் புகார்
நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் செல்வ ஸ்டாலின் (வயது 22), என்ஜினீயர். இவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
நான் சொந்தமாக செல்போன் ஷோரூம் கடை வைக்க முயற்சித்தேன். இதற்காக ஒரு பிரபல செல்போன் கம்பெனியின் ஆன்லைன் வலைத்தளத்துக்கு சென்று செல்போன் ஷோரூம் அமைப்பதற்காக விண்ணப்பித்தேன். பின்னர் எனது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது.
ரூ.7¾ லட்சம் மோசடி
எதிர்முனையில் பேசியவர், அந்த செல்போன் கம்பெனியின் மேலாளர் என்றும் தனது பெயர் ராம்குமார் எனவும் கூறினார். அப்போது நீங்கள் ஷோரூம் அமைப்பதற்காக விண்ணப்பித்த விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். மேலும் செல்போன்கள் அனுப்பவும், டீலருக்கான கட்டணம், பதிவு கட்டணம், வரி உள்ளிட்டவைகளுக்காக ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 450 செலுத்த வேண்டும் எனவும் கூறினர்.
இதனை தொடர்ந்து அந்த நபர் கொடுத்த 4 வங்கி கணக்குகள் மற்றும் போன்பே மூலம் ரூ.7,88,450-ஐ செலுத்தினேன். இதையடுத்து ராம்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் என்னை பணம் மோசடி செய்து ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும் அந்த செல்போன் கம்பெனியின் வலைத்தளமும் போலியானது. எனவே என்னிடம் பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.