குளித்தலை மின்வாரிய அலுவலர், ஆசிரியர் மீது ஊராட்சி தலைவர் புகார்

கிராமசபை கூட்டம் நடத்த விடாமல் தகராறு செய்வதாக மின்வாரிய அலுவலர், ஆசிரியர் மீது ஊராட்சி தலைவர் புகார் அளித்தார். இதன்பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-05 18:43 GMT
குளித்தலை, 
கிராமசபை கூட்டம்
திம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி குளித்தலை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் திம்மம்பட்டி ஊராட்சியில் ஒவ்வொரு முறையும் கிராமசபை கூட்டம் நடக்கும் போதெல்லாம் அதில் கலந்து கொண்ட திம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி பகுதியை சேர்ந்த மின்வாரிய அலுவலரான ஜெய்பாபுஜி மற்றும் கோமாளிபாறை வடக்கு தெருவை சேர்ந்த ஆசிரியரான ராமராஜ் ஆகியோர் தகராறு செய்து வந்தனர்.
2 பேர் மீது வழக்கு
கடந்த பிப்ரவரி மாதம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தபோது, அங்குவந்த ஜெய்பாபுஜி, ராமராஜ் ஆகியோர் கிராமசபை கூட்டத்தை நடத்த கூடாது என தகராறில் ஈடுபட்டனர். மேலும், திம்மம்பட்டி ஊராட்சி தலைவரான செல்வியையும், துணைத்தலைவர், அரசு அதிகாரிகள் ஆகியோர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அலுவலகத்தின் கேட்டை பூட்டினர்.
மேலும் ஊராட்சியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்பி வருகிறார்கள். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஜெய்பாபுஜி மற்றும் ராமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்