சர்வதேச அளவிலான ஜவுளி வர்த்தக கண்காட்சி

சர்வதேச அளவிலான ஜவுளி வர்த்தக கண்காட்சி அமெரிக்காவில் ஜூன் மாதம் 11-ந் தேதி நடைபெறுகிறது.

Update: 2022-03-05 18:33 GMT
கரூர், 
ஜவுளி வர்த்தக கண்காட்சி
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சர்வதேச அளவிலான வீட்டு உபயோக ஜவுளிகள் மற்றும் ஆயுத்த ஆடைகள் குறித்தான ஜவுளி வர்த்தக கண்காட்சி வருகிற ஜூன் மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்தும், அதில் பங்கேற்பது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதற்கு  ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் வரவேற்புரை ஆற்றினார். 
ரூ.25 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் 
கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் கண்காட்சியின் உத்திகள் குறித்தும், இதற்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் குறித்து ஜி.டி.டி.எப். நிர்வாக இயக்குனர் சந்திப்பட்டேல் பேசினார். இதையடுத்து, உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் வரும் 2030-ம் ஆண்டுக்குள் கரூர் நகரில் இருந்து ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு ஜவுளி வர்த்தகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டி வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் செய்வதற்கு கட்டுமான பணி, விரிவாக்கம், உற்பத்தி திறன், மார்க்கெட்டிங் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு நேரிடையாக நடைபெற கூடிய கண்காட்சி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களை இங்கு வரவழைத்து சங்க நிர்வாகிகளுக்கு அந்த கண்காட்சி குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு மத்திய அரசின் மானியம் பெற்று குறைந்த செலவில் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதே நிலையில் கரூர் நகரில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள் கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் நிதியுதவியுடன் கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் வெகு விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்