கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்
சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளினர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளினர்.
மீன்பிடி திருவிழா
சிங்கம்புணரி அருகே பிரான்மலை ஊராட்சிக்கு உட்பட்ட ஐநூத்திபட்டி கிராமத்தில் ஐநூத்தி கண்மாய் பகுதியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் விவசாயத்திற்காக கண்மாயில் மழை நீர் சேகரிக்கப்பட்டு மழைநீர் வற்றிய உடன் மீன்பிடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்று.
அதன் அடிப்படையில் தற்போது ஐநூத்தி கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் மழை பெய்து மீண்டும் கண்மாய் நிரம்ப விவசாயம் செழிக்க மீன்பிடி திருவிழா நடத்த கிராமத்தினர் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்களை அள்ளிய கிராம மக்கள்
கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கண்மாய் கரையில் பச்சைக்கொடி வீச கரையில் காத்திருந்த ஐநூத்திபட்டி கிராம மக்கள், வேங்கைபட்டி, பிரான்மலை, தேனம்மாள்பட்டி, வையாபுரிபட்டி, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, முட்டாகட்டி, ஒடுவன் பட்டி போன்ற பகுதிகளிலிருந்து வந்த மீன்பிடியாளர்கள் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை லாவகமாக பிடிக்க தொடங்கினார்கள். பலவகையான வலைகளை கொண்டு மீன் பிடிக்க தொடங்கினர்.சிலர் தங்கள் கைகளால் மீன்களை பிடித்தனர்.குறிப்பிட்ட அளவுக்கு மீன்கள் கிடைத்தவுடன் மகிழ்ச்சியுடன் மீன்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்று மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.