தர்மபுரியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்-மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம்
தர்மபுரி சோகத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுடன், காளையர்கள் மல்லுக்கட்டினர். இதில் மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரி:
ஜல்லிக்கட்டு
தர்மபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தர்மபுரி சோகத்தூரில் நேற்று நடந்தது. போட்டியை உதவி கலெக்டர் சித்ரா விஜயன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் கார்த்திக், தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டி.என்.சி. இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், போட்டி விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக உறுதிமொழி ஏற்று கொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்களுக்கு முன்கூட்டியே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
சீறிய காளைகள்
வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் மொத்தம் 500 காளைகள் பங்கேற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். பார்வையாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உற்சாக குரல் எழுப்பியபடி ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தபடி சென்றன. காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். ஆனால் பல காளைகள் பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் பிடிபடாமல் கம்பீரமாக சுற்றி வந்தன.
மல்லுக்கட்டிய காளையர்கள்
வாடிவாசலில் இருந்து திமிறியபடி ஓடி வந்த காளைகளுடன், காளையர்கள் மல்லுக்கட்டினர். காளைகளின் திமிலை பிடித்த காளையர்கள், அவற்றை அடக்கி தங்கள் வீரத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினர். இவ்வாறு காளைகளுடள் மல்லுக்கட்டிய காளையர்களுக்கு அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் பலத்த கைதட்டலுடன் பாராட்டு தெரிவித்தனர். விழா குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது போட்டி விதிமுறைகள் குறித்து அறிவித்தபடி இருந்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அடங்காமல் திமிறியபடி சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை வீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு மற்றும் சில்வர் அண்டா, குடம் உள்ளிட்ட பாத்திரங்கள், மிக்ஸி, ஹாட்பாக்ஸ், பீரோ உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
10 பேர் படுகாயம்
ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் சிலர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போட்டியையொட்டி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மேற்பார்வையில், தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போட்டி நடந்த பகுதியில் தயார் நிலையில் இருந்தன.
முதல் பரிசு
இந்த போட்டிகளின் முடிவில் 21 காளைகளை பிடித்த மணப்பாறையை சேர்ந்த மாடுபிடி வீரர் கில்பர்ட்டுக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள், 17 காளைகளை பிடித்த பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த குபேந்திரனுக்கு 2-வது பரிசாக பிரிட்ஜ், 15 காளைகளை பிடித்த நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமாருக்கு 3-வது பரிசாக வாஷிங்மெஷின் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. இதேபோல் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் மாவட்டம் பண்ணக்காரன்பட்டி அண்ணாத்த, தர்மபுரி மருது, கடத்தூர் வெள்ளையன் ஆகிய காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.