மனைவியை வெட்டிக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-03-05 17:36 GMT
கிருஷ்ணகிரி:
மனைவி வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மத்தம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). விவசாயி. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், 2-வதாக அதே பகுதியை சேர்ந்த கவிதா (30) என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.
கவிதாவின் நடத்தையில், வேலுச்சாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த, 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி 2-வது மனைவி கவிதாவை, வேலுச்சாமி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை 
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி லதா முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக வேலுசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.

மேலும் செய்திகள்