தேனியில் மேல்நிலைத்தொட்டிகள் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

தேனியில் மேல்நிலைத்தொட்டிகள் நிரம்பி சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-03-05 16:54 GMT
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வைகை அணை பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தேனிக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு பிரமாண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளில் நிரப்பி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தேனி கே.ஆர்.ஆர். நகரில் 2 குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், ஒரு தரைமட்ட தொட்டி ஆகியவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்தநிலையில் நேற்று பகலில் மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் தரைமட்ட குடிநீர் தொட்டி ஆகியவை நிரம்பின. அதன்பிறகு ராட்சத குழாய்களில் இருந்து வந்த குடிநீர் தொட்டிகளில் இருந்து வெளியேறி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள சாக்கடை கால்வாய்கள் வழியாக வீணாக பெருக்கெடுத்து ஓடியது. அதிக அளவில் தண்ணீர் சென்றதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது. இதை பார்த்து பொதுமக்கள் வேதனை அடைந்தனர். சில இடங்களில் இந்த குடிநீர் வெள்ளத்தில் செடிகள், குப்பைகள் இழுத்து வரப்பட்டு வீடுகளின் நுழைவு வாயில் பகுதிகளில் அடைப்பை ஏற்படுத்தின. இவ்வாறு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் குடிநீர் வீணாக ஓடியது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தேனி நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் வந்த பிறகு குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. இவ்வாறு வீணாகும் குடிநீருக்கும் சேர்த்து பொதுமக்கள் தான் வரி செலுத்துகிறோம். எனவே, குடிநீர் தொட்டிகள் நிரம்பினால் உடனடியாக தண்ணீர் வருவதை நிறுத்த சென்சார் கருவிகள் பொருத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்