தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சேதமடைந்த பாலங்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா கோட்டூர் ஊராட்சியில் பள்ளிவர்த்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரிய வாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மதகு பாலம், தடுப்பு பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்கால் அருகே உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பாலம் சேதமடைந்துள்ளதால் கனரக வாகனங்கள் அந்த சாலை வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலங்கள் மற்றும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பரமசிவம், மன்னார்குடி.
தார்சாலை வேண்டும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் கத்தரிபுலம் கிராமம் கோவில்குத்தகை வடக்கு பகுதி வடகாட்டு சாலையின் இணைப்பு சாலை மண்பாதையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருசக்கர மற்றும் கனரக வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் தார் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கத்தரிப்புலம்.
பகலில் ஒளிரும் தெருவிளக்கு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் சட்டநாதபுரம் பகுதி செங்கமேடு கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி சாலையில் சென்று வர மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் செங்கமேடு கிராமத்தில் உள்ள தெருவிளக்கு ஒன்று கடந்த சில வாரங்களாக இரவு மட்டுமின்றி பகலிலும் ஒளி வீசி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்கு இரவில் மட்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
-குருசாமி, செங்கமேடு.