திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை 4 ஆயிரத்து 308 பேர் எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வை 4 ஆயிரத்து 308 மாணவர்கள் எழுதினர்.
திண்டுக்கல்:
ஏழ்மையின் காரணமாக பல மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகின்றன.
இதற்கு மாணவர்களின் திறமையை சோதிக்கும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி ஒவவொரு ஆண்டும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 379 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் தேர்வை கண்காணிக்க 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அதில் 4 ஆயிரத்து 308 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் 71 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. இந்த தேர்வு நடைபெற்ற மையங்களில் முதன்மை கல்வி அலுவலர் கருப்புச்சாமி திடீர் ஆய்வு செய்தார்.