ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது
கோவையில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை
கோவையில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆம்புலன்ஸ் டிரைவர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகேயுள்ள கம்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் கோவை ராமநாதபுரம் பகுதியில் தங்கியிருந்து ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் மணிகண்டன் பழகி வந்தார். அந்த சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறி அவரிடம் நெருங்கி பழகி வந்தார். அப்போது, அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
பாலியல் பலாத்காரம்
கடந்த 6 மாதத்திற்கு முன்பு மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்த சிறுமி, பெற்றோரிடம் செல்போனில் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் சிறுமியை தேனி மாவட்டத்திற்கு கடத்திச்சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் மணிகண்டன் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவானார்.
போக்சோவில் கைது
தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டனை மடக்கி பிடித்தனர்.
பின்னர் மணிகண்டன் மீது சிறார் திருமண தடை சட்டம், சிறார் பாலியல் பலாத்காரம் (போக்சோ) உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.