வழிப்பறியில் ஈடுபட்ட நெல்லை சகோதரர்கள் 2 பேர் கைது

ுலசேகரம் அருகே தந்தையின் கொலைக்கு பழிவாங்க வழிப்பறியில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த 2 சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-05 00:01 GMT
குலசேகரம்:
குலசேகரம் அருகே தந்தையின் கொலைக்கு பழிவாங்க வழிப்பறியில் ஈடுபட்ட நெல்லையை சேர்ந்த 2 சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். 
வழிப்பறி
குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் நாராயணபிள்ளை (வயது 72) சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 வாலிபர்கள் நாராயணபிள்ளையிடம் அரிவாளைக் காட்டி ரூ.550 பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
 இதுகுறித்த புகாரின் புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி நேற்று காலையில் திற்பரப்பு அருவி பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து அரிவாள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
சகோதரர்கள் கைது
 விசாரணையில், நெல்லை மாவட்டம் கிருஷ்ணபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த ரசூல் என்ற முத்தையா (21), செய்யது என்ற மாயாண்டி (19) என்பதும், இவர்கள் மீதும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அம்பை, மூலைக்கரைபட்டி, மூன்றடைப்பு, சிவந்திபுரம், விஜயநாராயணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதன் விவரம் வருமாறு:-
தந்தை கொலைக்கு...
 செய்யது, ரசூல் ஆகியோரின் தந்தையான பீர்முகமது என்ற அய்யாதுரை மற்றும் கைதான 2 பேரின் அண்ணனான கோதா என்ற சரவணனையும் கடந்த ஆண்டு சிலர் கொலை செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளதாகவும்,
 அவர்கள் வெளியே வரும் போது பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு பணம் தேவைப்பட்டதால் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 
மோட்டார் சைக்கிள் திருட்டு
அதன்படி கடந்த 27-ந்தேதி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளை திருடி விட்டு குலசேகரம் வந்தனர். பின்னர், செருப்பாலூரில் கோவிலுக்கு வந்தவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர்.
 ஆனால், பெரிய தொகை கிடைக்காததால் திற்பரப்பு அருவியில் குளிக்க வரும் நபர்களிடமிருந்து பணம் பறிக்க திட்டமிட்டு அங்கு பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டனர்.
இதையடுத்து ரசூல், செய்யது ஆகிய 2 பேர் மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்