நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி பேரூராட்சிகளில் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு-தி.மு.க.- காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதம்; நாற்காலிகள் வீச்சு

நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி பேரூராட்சிகளில் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க.- காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.

Update: 2022-03-04 23:01 GMT
சேலம்:
நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி பேரூராட்சிகளில் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க.- காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.
31 பேரூராட்சிகள்
சேலம் மாவட்டத்தில் 31 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் நேற்று தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் 26 பேரூராட்சிகளில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். மல்லூர் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் லதா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற 4 பேரூராட்சிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
நங்கவள்ளி பேரூராட்சி
நங்கவள்ளி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர், பா.ம.க. கவுன்சிலர்கள் 2 பேர், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர், பா.ஜனதா கவுன்சிலர் ஒருவரும் வெற்றி பெற்று இருந்தனர்.  இந்த நிலையில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான மோகனகிருஷ்ணன் தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்தார்.
அப்போது தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் இங்கு எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, சுயேச்சை கவுன்சிலர்கள் தன்னிச்சையாக இல்லை. இங்கு தேர்தல் நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தலை நடத்தக்கூடாது. கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறி பேரூராட்சி செயல் அலுவலர் மோகனகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாற்காலிகள் வீச்சு
மேலும் தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதன் காரணமாக தி.மு.க.-காங்கிரஸ்-அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு உருவானது. இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மோகனகிருஷ்ணன், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியே சென்றனர்.
அதன் பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர் மாணிக்கவேல் தலைமையில் 8 கவுன்சிலர்கள் தலைவர் தேர்தலை நடத்த கோரி காலை 11.30 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வனவாசி பேரூராட்சி
வனவாசி பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.-8, தி.மு.க.-3, சுயேச்சை-1 ஆகிய இடங்களை கைப்பற்றி இருந்தது. வனவாசி பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான ஷஹாதாஸ்பேகம் நேற்று தலைவர் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமானார். அப்போது அ.தி.மு.க. தலைவர் வேட்பாளர் ஞானசேகரனுக்கு 8 அ.தி.மு.க. கவுன்சிலர்களும், ஒரு சுயேச்சை கவுன்சிலரும் ஆதரவு தெரிவிக்க வந்தனர். இதனிடையே 3 தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தல் அதிகாரியிடம் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தேர்தல் அதிகாரி ஷஹதாஸ் பேகம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளதாக கூறி, தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதனால் அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் 9 பேர் தங்களுக்கு தனி மெஜாரிட்டி உள்ளது எனவே தேர்தலை நடத்த வேண்டும் என கோரி வனவாசி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் மதியம் 12.30 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நங்கவள்ளி, வனவாசி பேரூராட்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காடையாம்பட்டி பேரூராட்சி
காடையாம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.-7 வார்டுகளிலும், அ.தி.மு.க.-7 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்று இருந்தனர். இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற மறைமுக தேர்தலில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் 9.30 மணிக்கு வந்தனர். தி.மு.க. கவுன்சிலர்கள் 7 பேர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் ஒருவரும் வரவில்லை.  காலை 10 மணி வரை காத்திருந்த பேரூராட்சி செயல்அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான மயில்வாகனம் போதிய கோரம் இல்லாததால் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
பேளூர் பேரூராட்சி
வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க.-6, அ.தி.மு.க.-6, சுயேச்சை-3 வார்டுகளை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று காலை மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தலைவர் வேட்பாளருக்கு விண்ணப்பிக்க தேர்தல் நடத்தும் அலுவலர் ராமு அறிவித்தபோது, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கூடுதலாக 2 சுயேச்சை உறுப்பினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சுயேச்சை உறுப்பினரை கடத்தி சென்று விட்டனர் என்று தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர். இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் வாக்குப்பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால், தேர்தல் நடத்தும் அலுவலர் ராமு தேர்தலை ஒத்திவைத்தார். இதை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகம் செல்வதாக கூறி கலைந்து சென்றனர். இதனிடையே வாழப்பாடி போலீசாரிடம் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்