சேலம் மாநகராட்சி மேயராக ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு-துணை மேயரானார் சாரதாதேவி
சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதாதேவி தேர்வானார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதாதேவி தேர்வானார்.
மாநகராட்சி
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 50 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அதன்பிறகு சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இதனால் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 52 ஆக உயர்ந்தது. தனி மெஜாரிட்டியாக சேலம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
இதனிடையே, மாநகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 60 மாமன்ற உறுப்பினர்களும் கடந்த 2-ந் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
போட்டியின்றி மேயர் தேர்வு
இந்த நிலையில், சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகிய பதவிகளுக்கு நேற்று மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 6-வது வார்டில் வெற்றி பெற்ற ஆ.ராமச்சந்திரனை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் நேற்று காலை 10 மணிக்கு மேயர் தேர்வு நடந்தது.
இதில், மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆ.ராமச்சந்திரன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவித்தார். அப்போது, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கைகளை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ஆ.ராமச்சந்திரனுக்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பின்னர் அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார்.
வாழ்த்து
தொடர்ந்து புதிய மேயராக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராமச்சந்திரனுக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார். மேலும், தி.மு.க. நிர்வாகிகள், புதிய கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் புதிய மேயருக்கு சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
துணை மேயர் தேர்வு
இதையடுத்து பிற்பகல் 2.30 மணிக்கு சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. துணை மேயர் பதவி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் 7-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாரதாதேவி, துணை மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் மாநகராட்சி துணை மேயராக சாரதாதேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவித்தார்.
பின்னர் துணை மேயருக்கு ஆணையாளர் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த மேயர் மற்றும் துணை மேயர் பதவி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 7 கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் வாழ்த்து
முன்னதாக திருச்சியில் இருந்து சேலத்துக்கு வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அவர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேயர் ராமச்சந்திரனுக்கு மேயருக்கான சிவப்பு அங்கியை அணிவித்து மேயர் இருக்கையில் அமர வைத்தார். தொடர்ந்து மேயருக்கு அமைச்சர் கே.என்.நேரு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலரும் மேயர் ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.