சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
சேலம்:
சேலத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
வாழ்த்து
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேனி மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்வு, அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வருகின்றனர். இதுதவிர நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.
ஆலோசனை
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் வெங்கரை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் சேலத்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேற்று வந்தனர். அங்கு அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மேலும் அங்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், ராமச்சந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது கட்சியின் வளர்ச்சி மற்றும் சசிகலா விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.