தி.மு.க. கவுன்சிலர் சுயேச்சையாக போட்டியிட்டு உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆனார்

உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரை வீழ்த்தினார். இதையடுத்து கல்வீச்சு, சாலைமறியல் சம்பவங்கள் நடந்தன.

Update: 2022-03-04 22:02 GMT
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரை வீழ்த்தினார். இதையடுத்து கல்வீச்சு, சாலைமறியல் சம்பவங்கள் நடந்தன.
தி.மு.க.வுக்கு 12 இடங்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. நடந்துமுடிந்த தேர்தலில் 12 இடங்களை தி.மு.க.வும் 9 இடங்களை அ.தி.மு.க.வும், 2 இடங்களை அ.ம.மு.க.வும், ஒரு இடத்தை காங்கிரசும் கைப்பற்றின. 
இந்த நிலையில் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சீமானூத்து ஊராட்சி தலைவர் அஜித் பாண்டியின் தாயாரான 10-வது வார்டில் வெற்றிபெற்ற செல்வி என்பவரை வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது. 
இந்த நிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது திடீரென தி.மு.க. சார்பில் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய்யின் தாயாரான 11-வது வார்டில்  வெற்றி பெற்ற சகுந்தலா என்பவர், தானும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 
இந்த வாக்கெடுப்பின் முடிவில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வி 6 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சகுந்தலா 17 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாதவையாக பதிவானது. இதனை தொடர்ந்து சுயேச்சையாக களம் இறங்கிய தி.மு.க. கவுன்சிலர் சகுந்தலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
முற்றுகை
இதையடுத்து செல்வியின் ஆதரவாளர்கள், கட்சி தலைமமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தி.மு.க.வினர் செயல்படுகிறார்கள் எனக் கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் கற்கள் வீசப்பட்டன. 
மேலும் மதுரை-தேனி சாலையில் உள்ள கண்ணன் தியேட்டர் அருகில் செல்வி ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்த பின்னர் கலைந்து சென்றனர். 
சுயேச்சையாக போட்டியிட்ட சகுந்தலாவுக்கு தி.மு.க. மட்டுமின்றி அ.தி.மு.க, அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவும் கிடைத்து, அவர் வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்