மதுரை மாநகராட்சியின் 10-வது மேயராக இந்திராணி பதவியேற்றார்
மதுரை மாநகராட்சியின் 10 வது மேயராக இந்திராணி பதவியேற்றார். அவர் மதுரை மாநகர வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சியின் 10வது மேயராக இந்திராணி பதவியேற்றார். அவர் மதுரை மாநகர வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கூறினார்.
மேயர் தேர்தல்
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தம் 80 வார்டுகளில் வெற்றி பெற்றன. அதில் தி.மு.க. 67 வார்டுகளிலும், காங்கிரஸ்-5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-4, ம.தி.மு.க.-3, விடுதலை சிறுத்தை கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அந்த கட்சி சார்பில் போட்டியிடும் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களே வெற்றி பெறும் நிலை இருந்தது. அதன்படி மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 57-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திராணி (வயது 42) அறிவிக்கப்பட்டார். துணை மேயர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் 80-வது வார்டு கவுன்சிலர் நாகராஜன் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.
மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தி.மு.க.வின் இந்திராணி மட்டுமே மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
மதுரை வளர்ச்சி
அதனைத்தொடர்ந்து இந்திராணி மேயராக நேற்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார். அவர் மேயருக்கான 101 பவுன் தங்கப்பதக்கம் மற்றும் அங்கியை அணிந்து வந்து பதவியேற்றார். அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இருக்கையில் அமரவைத்து செங்கொல் வழங்கினார். அப்போது மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன்பின் மேயர் இந்திராணி நிருபர்களிடம் கூறியதாவது:-
அன்னை மீனாட்சியின் அருளால், தன்னலமற்று உழைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியுடன், இந்தியாவிலே தலைசிறந்த நிதி அமைச்சராக விளங்கும் பழனிவேல் தியாகராஜன் வழிகாட்டுதல்படி நான் செயல்படுவேன். மதுரையின் வளர்ச்சிக்காக என்னுடைய செயல்பாடுகள் நேர்மையாக இருக்கும். எனக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்தியமாக செயல்படுவேன் என்றும், மதுரையின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றும் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் மேயர்
மதுரை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்று இருக்கும் இந்திராணி, மாநகராட்சியின் 10-வது மேயர் ஆவார். அதே போல் பெண் மேயர்களில் 2-வது பெண் மேயர். கடந்த 1971-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்த போது மதுரை நகராட்சியை, மதுரை மாநகராட்சி யாக தரம் உயர்த்தினார். எனவே அப்போது நகராட்சி தலைவராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த எஸ்.முத்து மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றார். அதன்பின் 1978-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது.
அப்போது தி.மு.க.வில் இருந்த முத்து, அ.தி.மு.க.விற்கு கட்சி மாறி இருந்தார். எனவே முத்துவே மீண்டும் 2-வது மேயராக பொறுப்பேற்றார். அப்போது மேயர்கள் பதவி 6 ஆண்டுகள் என இருந்தது. எனவே எம்.ஜி.ஆர். மேயர் பதவி ஒருவருக்கே 6 ஆண்டுகள் என இல்லாமல் அதனை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். அதன்காரணமாக 1978 முதல் 1980-ம் ஆண்டு வரை முத்து மேயராக இருந்தார். 1980 முதல் 1982-ம் ஆண்டு வரை 3-வது மேயராக எஸ்.கே.பாலகிருஷ்ணனும், 1982-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை 4-வது மேயராக பட்டுராஜனும் இருந்தனர்.
10 வது மேயர்
1996-ம் ஆண்டு நடந்த முதல் நேரடி மேயர் தேர்தலில் குழந்தைவேலு வெற்றி பெற்று 5-வது மேயராக பொறுப் பேற்றார். 2001-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க. வெற்றி பெற்றது. 6-வது மேயராக செ.ராமச்சந்திரன் பொறுப்பேற்றார். 2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தி.மு.க. வெற்றி பெற்று 7-வது மேயராகவும், முதல் பெண் மேயராகவும் தேன்மொழி கோபிநாதன் பொறுப்பேற்றார். அதனைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் அ.தி.மு.க. ராஜன் செல்லப்பா வெற்றி பெற்று 8-வது மேயராக இருந்தார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜன் செல்லப்பா மேயர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே துணை மேயராக இருந்த திரவியம் மேயர் பொறுப்பு ஏற்று கொண்டார். அவர் 9-வது மேயர் ஆவார். தற்போது 10-வது மேயராக இந்திராணி பொறுப்பேற்றுள்ளார்.