பெண்ணை கொன்றவர்களை கைது செய்யக்கோரி 2-வது நாளாக மறியல்

பெண்ணை கொன்றவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-04 19:36 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள நயினார்கோவில் சிறுவயல் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது55). இவரது மனைவி ராணி (53). இவர்  மிளகாய் தோட்டத்தில் மிளகாய் பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மருமகள் பவித்ரா தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ராணி உடலில் படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு கதறி அழுது கூச்சலிடவே அனைவரும் வந்து பார்த்துள்ளனர். ராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு ஆகியவைகளை பறித்துக்கொண்டு பலமாக தாக்கிவிட்டு சிலர் தப்பி ஓடியதும் இதில் ராணி பரிதாபமாக இறந்து கிடந்ததையும் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நயினார் கோவில் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் நகைக்காக பெண்ணை அடித்து கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி முன்பு பலியான பெண்ணின் உறவினர்கள் மற்றும் சிறுவயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரின் சமாதான முயற்சிக்கு பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இந்த நிலையில் மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த ராணியின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் 2-வது நாளாக நேற்று காலை திடீரென்று அரசு ஆஸ்பத்திரி வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அங்கு விரைந்து சென்று மறியிலில் ஈடுபட்டவர்களை சமாதானப் படுத்தினார். போலீசாரின் வாக்குறுதியை தொடர்ந்து மறியலை கைவிட்டு ராணியின் உடலை பெற்றுச்சென்றனர்.

மேலும் செய்திகள்