உதயேந்திரத்தில் வாக்குச்சீட்டுகளை கிழித்து போராட்டம் நடத்திய தி.மு.க.வினர் மீது போலீ்ஸ் தடியடி

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.சார்பில் வென்றவர் அ.தி.மு.க.வில் இணைந்து மனுதாக்கல் செய்தார். வாக்குச்சீட்டுகளை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

Update: 2022-03-04 19:31 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க.சார்பில் வென்றவர் அ.தி.மு.க.வில் இணைந்து மனுதாக்கல் செய்தார். வாக்குச்சீட்டுகளை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

அ.தி.மு.க.வில் இணைந்து போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றது. தி.மு.க. சார்பில் 8-வது வார்டில் வெற்றி பெற்ற பூசாராணியை தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சி தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்காக மறைமுக தேர்தல் நடக்க இருந்த நிலையில் பேரூராட்சி தலைவராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த பூசாராணியை எதிர்த்து, 3-வது வார்டில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மகேஸ்வரி அ.தி.மு.கவில் இணைந்து தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வாக்குச்சீட்டுகள் கிழிப்பு

இதனை கண்டித்து தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் வாக்குச் சீட்டை கிழித்தும், கண்காணிப்பு கேமராவை உடைத்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் போலீஸ் தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டும், காம்பவுண்ட் சுவர் மீது ஏறியும் தேர்தல் நடக்கும் இடத்தை நோக்கி ஓடினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பழனிமுத்து மற்றும் போலீசார் அவர்களை துரத்திச் சென்று லேசான தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதனை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக மறுதேதி அறிவிக்கப்படும் வரை தேர்தல் தள்ளி வைக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குருசாமி அறிவித்தார். இது குறித்த உத்தரவு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

அ.தி.மு.க.வினர் போராட்டம்

ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வை சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தேர்தல் நடத்தும் வரையில் இங்கேயே அமர்ந்து இருப்போம் என அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வாணியம்பாடி தாசில்தார் சம்பத், தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கலைந்து செல்லும்படி கூறினர் அதன் பின்னர் அவர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். 

சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவங்களால் உதயேந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்