பரமக்குடி நகர்மன்ற தலைவராக தி.மு.க. வேட்பாளர் சேது.கருணாநிதி போட்டியின்றி தேர்வு

பரமக்குடி நகர்மன்ற தலைவராக தி.மு.க. வேட்பாளர் சேது.கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் ம.தி.மு.க. ெவற்றி பெற்றது.

Update: 2022-03-04 19:30 GMT
பரமக்குடி, 

பரமக்குடி நகர்மன்ற தலைவராக தி.மு.க. வேட்பாளர் சேது.கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் ம.தி.மு.க. ெவற்றி பெற்றது.

தலைவர் போட்டியின்றி தேர்வு

பரமக்குடி நகராட்சியானது 36 வார்டுகளை கொண்டது. இதில் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க 10 வார்டுகளிலும், ம.தி.மு.க. 2 வார்டுகளிலும் பா.ஜ.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பரமக்குடி நகர்மன்ற தலைவர் தேர்வுக்கான தேர்தல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காக நகர்மன்ற உறுப்பினர்கள் நேற்று காலை 9.45 மணிக்கு வந்தனர்.அனைத்து உறுப்பினர்களும் போலீசாரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். வாக்களிக்கும் அரங்கத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. நகராட்சி ஆணையாளரும் தேர்தல் அதிகாரியுமான திருமால் செல்வம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என 24-வது வார்டு கவுன்சிலர் சேது. கருணாநிதியின் பெயரை அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிட யாரும் விண்ணப்பிக்கவில்லை. எனவே சேது கருணாநிதி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.அந்த தீர்மான குறிப்பேட்டில் அ.தி.மு.க.உறுப்பினர்கள் கையெழுத்து போடாமல் கிளம்பி சென்றனர்.
பின்பு நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட சேது. கருணாநிதி நகராட்சி அலுவலக குறிப்பேட்டில் கையெழுத்திட்டு நகர்மன்றத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மனைவி கண்ணீர்

 அதைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் அறைக்கு சென்று அவரது இருக்கையில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி சுதாராணி கண்ணீர் மல்க அவரை பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். உடனே அங்கிருந்த அனைவரும் அவரை சமாதானப்படுத்தினர். பின்பு நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதிக்கு முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், டாக்டர் சுந்தரராஜ், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகரன் உள்பட தி.மு.க. தொண்டர்களும், நகராட்சி அலுவலர்களும் பொன்னாடை, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

துணைத்தலைவர் தேர்தல்

மதியம் 2.30 மணிக்கு மேல் நகராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. அதில் ம.தி.மு.க. சார்பில் 33-வது வார்டு கவுன்சிலர் குணா என்ற குணசேகரன் வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் குணாதேவி வேட்பாளராக போட்டியிட்டார். பின்பு நகராட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில் குணசேகரன் 23 வாக்குகளும் குணாதேவி 13 வாக்குகளும் பெற்றனர். குணசேகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்