பள்ளி ஆசிரியரிடம் ரூ.88 ஆயிரம் மோசடி

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.88 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2022-03-04 19:00 GMT
ராமநாதபுரம், 

கீழக்கரை முத்துச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது45). இவர் ஆதஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி பிற்பகலில் இவர் பள்ளியில் இருந்தபோது அவரது செல்போனில் பேசிய நபர் தான் எஸ்.பி.ஐ. வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் தங்களின் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தி வழங்க அழைத்துள்ளதாகவும், மேலும், இதுநாள் வரை நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தியதற்கு பெற்றுள்ள பாய்ண்ட்டுகளை பணமாக மாற்றித்தருவதாகவும் கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மடிக்கணினி வாங்க திட்டமிட்டிருந்த மோகன் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்தினால் வாங்கி கொள்ளலாம் என்று கருதி அதன் விபரங்களை தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை வைத்து அவரது கார்டில் இருந்து ரூ.63 ஆயிரம் வரை சுருட்டிய மர்ம நபர், அடுத்ததாக டெபிட் கார்டில் உள்ள பாய்ண்ட்டுகளையும் பணமாக மாற்றி தருவதாக கூறி அதன் விபரங்களை பெற்று அதில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையிலும் எடுத்துள்ளனர். அழைப்பினை துண்டித்த மறுநொடியில் மோகனின் செல்போன் எண்ணிற்கு இரண்டு கார்டுகளிலும் ஆக மொத்தம் ரூ.88 ஆயிரத்து 325 பணம் எடுத்துள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மோகன் இது குறித்து சைபர்கிரைம் போலீசிற்கு ஆன்லைனில் புகார் செய்தார். தனது கார்டுகளில் உடனடியாக பண பரிவர்த்தனையை நிறுத்தி வைக்கும்படியும், மோசடியாக எடுத்த பணத்தினை பெற்றுத்தருமாறும் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் செய்திகள்