தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவையொட்டி தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஆழித்தேரோட்ட விழா
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்ட விழா நடைபெறுவது வழக்கம். ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்கிற சிறப்புக்குரியது.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழித்தேரோட்ட விழா ஆகமவிதிப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து 8.10 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனுடன் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடக்கிறது.
தேர் அலங்கரிக்கும் பணி மும்முரம்
இந்தநிலையில் ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான சவுக்கு, பனை சாத்துக்கள் உதவியுடன் தேரின் மேல் பகுதி கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனுடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. தேர் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் கீழ வீதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாள்தோறும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காட்சி கொடுத்த நாயனார் உற்சவம் நடந்தது. இதனையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
---