திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி பதவி ஏற்பு

திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி, துணை மேயராக ராஜப்பா பதவிஏற்றனர்.

Update: 2022-03-04 16:21 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி, துணை மேயராக ராஜப்பா பதவிஏற்றனர்.
தி.மு.க. கைப்பற்றியது
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 30 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. மேலும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 3 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன.
இதன்மூலம் தி.மு.க. கூட்டணி 37 வார்டுகளை பிடித்தது. அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வென்றது. இதற்கிடையே சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற 5 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். இதன்மூலம் தி.மு.க. கூட்டணியின் பலம் 42 ஆக உயர்ந்தது.
முதல் பெண் மேயர் 
இதற்கிடையே கடந்த 2-ந்தேதி 48 கவுன்சிலர்களும் பதவி ஏற்றனர். இதையடுத்து நேற்று மேயர், துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தி.மு.க. சார்பில் வென்ற பெண் கவுன்சிலர்களில் யாருக்கு மேயர் பதவி என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மேலும் அரசியல் பின்புலம் கொண்ட 3 பேர் உள்பட 5 பெண் கவுன்சிலர்களின் பெயர்கள் அடிபட்டன. அதேபோல் துணை மேயர் பதவிக்கு தி.மு.க. மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் முயற்சி செய்தனர். இந்த நிலையில் தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக 23-வது வார்டு கவுன்சிலர் இளமதி, துணை மேயர் வேட்பாளராக 32-வது வார்டு கவுன்சிலர் ராஜப்பா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
போட்டியின்றி தேர்வு 
இதைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணிக்கே கவுன்சிலர்கள் கூட்ட அரங்குக்கு வந்தனர். இதையடுத்து கமிஷனர் சிவசுப்பிரமணியன் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தார். தி.மு.க.வின் மேயர் வேட்பாளர் இளமதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடைய வேட்புமனுவை 7-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் முன்மொழிய, 13-வது வார்டு கவுன்சிலர் அருள்வாணி வழிமொழிந்தார். அவருக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இளமதி போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்படுவதாக கமிஷனர் அறிவித்தார். உடனே இளமதி எழுந்து நின்று கைகூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் கைதட்டியும், மேஜையை தட்டியும் ஆரவாரம் செய்தனர்.
பதவிஏற்பு 
இதையடுத்து இளமதியை மேயர் அமரும் மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கமிஷனர் சிவசுப்பிரமணியன் வெற்றி சான்றிதழை கொடுத்தார். பின்னர் மேயருக்கான சிவப்பு அங்கி, தங்க சங்கிலியை அணிந்து திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி பதவிஏற்றார். அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் மேயர் இளமதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கி வாழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளர் ராஜப்பா வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடைய வேட்புமனுவை 19-வது வார்டு ஆரோக்கிய செல்வி முன்மொழிய, 33-வது வார்டு ஜான்பீட்டர் வழிமொழிந்தார். அவருக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் ராஜப்பா துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கமிஷனர் சிவசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். அதன்படி துணை மேயராக ராஜப்பா பதவி ஏற்றார். அவருக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோர் அனைத்து கவுன்சிலர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
அ.தி.மு.க. புறக்கணிப்பு-பா.ஜனதா பங்கேற்பு
திண்டுக்கல் மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர் உள்ளனர். அதில் ராஜ்மோகன், பாஸ்கரன், உமாதேவி, சத்தியவாணி ஆகியோர் மேயர், துணை மேயர் தேர்தல் மற்றும் பதவி ஏற்பில் பங்கேற்கவில்லை. ஆனால் 45-வது வார்டு கவுன்சிலர் அமலோற்பவமேரி மேயர் தேர்தலின் போது வந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவரும் சென்று விட்டார். அதேநேரம் பா.ஜனதா கவுன்சிலர் தனபாலன், மேயர் மற்றும் துணை மேயர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றார்.
பச்சை போய் சிவப்பு வந்தது
திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய மாமன்ற கூட்ட அரங்கில் மேயர், துணை மேயர் தேர்தல், பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த அரங்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது ஆகும். இதனால் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். மாமன்ற கூடம் என்று பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. மேலும் மேயர் அமரும் மேடை பச்சை நிறத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பதவி ஏற்பு விழாவில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். மாமன்ற கூடம் என்ற பெயர் நீக்கப்பட்டு இருந்தது. மேலும் மேயர் அமரும் மேடை சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டு இருந்தது. அதேபோல் முன்பு பச்சை நிறமாக இருந்த மேயர் அங்கியும் நேற்று சிவப்பு நிறமானது.
துணை மேயர் தாயின் பூரிப்பு 
துணை மேயராக ராஜப்பா பதவி ஏற்றதும் தி.மு.க. கவுன்சிலர்கள், தி.மு.க.வினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதை அவருடைய தாயார் அந்தோணிபாக்கியம் பார்வையாளர்களுடன் நின்று தனது மகன் துணை மேயரானதை பூரிப்போடு பார்த்து கொண்டிருந்தார். பின்னர் மேடைக்கு சென்ற அவர் மேயர், துணை மேயருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். மேலும் உணர்ச்சி பெருக்குடன் கைகளை கூப்பி கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.
பெண் மேயரின் முதல் பேட்டி 
திண்டுக்கல்லின் முதல் பெண் மேயர் இளமதி பதவி ஏற்றதும், நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சி முழுவதும் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அதோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என்றார்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்திப்பு 
திண்டுக்கல் மாநகராட்சியின் அ.தி.மு.க. தலைவராக ராஜ்மோகன், துணை தலைவராக பாஸ்கரன், கொறடாவாக சத்தியவாணி, செயலாளராக உமாதேவி, பொருளாளராக அமலோற்பவமேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான கடிதத்தை நேற்று மாலை கமிஷனரை சந்தித்து, கவுன்சிலர்கள் ராஜ்மோகன், பாஸ்கரன், சத்தியவாணி, உமாதேவி ஆகியோர் வழங்கினர். மேலும் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்