மீஞ்சூர் அருகே கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மீஞ்சூர் அருகே கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-04 14:06 GMT
கியாஸ் நிரப்பும்தொழிற்சாலை

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் 110 ஏக்கரில் இந்தியன் ஆயில் பெட்ரோனாஸ் என்ற தனியார் கியாஸ் ஏற்றுமதி இறக்குமதி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த கியாஸ் தொழிற்சாலைக்கு காமராஜர் துறைமுகத்தில் இருந்து புரோபேன் மற்றும் பியுட்டேன் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் கியாஸ் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. பின்னர் இங்குள்ள கியாஸ் சேமிப்பு தொழிற்சாலை கிடங்கில் ராட்சத டேங்கர் லாரிகளில் கியாஸ் நிரப்பும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த தொழிற்சாலை ஆண்டொன்றுக்கு 24 லட்சம் டன் கியாசை கையாளுகிறது. 18 முதல் 21 டன் வரை ராட்சத டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்ட கியாஸ் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு நாள்தோறும் 250 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கியாஸ் நிரப்பும் ஆலைகளில் இறக்கப்படுகிறது.

அங்கிருந்து சிலிண்டர் மூலம் கியாஸ் நிரப்பப்பட்டு வீடுகளுக்கு மற்றும் இதர உபயோகிப்பவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்த தொழிற்சாலையில கடந்த 2012-ம்ஆண்டில் இருந்து ஒப்பந்த தனியார் நிறுவனத்தில் ராட்சத லாரிகளில் கியாஸ் நிரப்பும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, விபத்து காப்பீடு உட்பட எந்த பலனையும் தொழிலாளருக்கு தனியார் நிறுவன நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் ஒன்று கூடி கியாஸ் நிறுவனத்தில் ஒப்பந்ததொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் விபத்து காப்பீடு வழங்க வேண்டும், பஞ்சப்படி, போக்குவரத்து படி, வீட்டு வாடகை படி உள்பட ஊதிய உயர்வு வழங்கக்கோரி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணும்படி கூறியதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்