டாலர் சிட்டியான திருப்பூர் மாநகரின் மேயராக தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். துணை மேயராக பாலசுப்பிரமணியம் பொறுப்பேற்றார்.
தி.மு.க. பெரும்பான்மை
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. கவுன்சிலர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தி.மு.க. கூட்டணி 37 வார்டுகளையும், அ.தி.மு.க. கூட்டணி 19 வார்டுகளையும், பா.ஜனதா, சுயேச்சை தலா 2 வார்டுகளையும் கைப்பற்றின. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 23 வார்டுகளையும், இந்திய கம்யூனிஸ்டு 6 வார்டுகளையும், ம.தி.மு.க. 3 வார்டுகளையும், காங்கிரஸ் 2 வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி தலா 1 வார்டுகளையும் வென்றன.
தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையை பெற்றது. மேயர் வேட்பாளராக 49வது வார்டு கவுன்சிலரும், திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளருமான தினேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். துணை மேயராக 37வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டார். தி.மு.க. கூட்டணியின் பலம் 37 ஆக இருந்தநிலையில் 22வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் தி.மு.க.வில் இணைந்தார். மேலும் 8-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் வேலம்மாள், 10-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் பிரேமலதா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். இதன்காரணமாக மாமன்றத்தில் தி.மு.க. கூட்டணியின் பலம் 40 ஆக உயர்ந்தது.
மேயரானார் தினேஷ்குமார்
திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 37 கவுன்சிலர்கள் மற்றும் புதிதாக தி.மு.க.வில் இணைந்த 3 கவுன்சிலர்கள் என மொத்தம் 40 கவுன்சிலர்கள் மாமன்ற அரங்குக்கு வந்து மறைமுக தேர்தலில் பங்கேற்றார்கள். பின்னர் மேயர் வேட்பாளராக கவுன்சிலர் தினேஷ்குமார் வேட்பு மனு செய்தார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து திருப்பூர் மேயராக தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவித்து அவருக்கு மேயர் தேர்வுக்கான சான்றிதழை வழங்கினார். பின்னர் தினேஷ்குமார் மேயர் அங்கி, மற்றும் 101 பவுன் தங்க மாலை அணிந்து மாமன்ற அரங்குக்கு வந்து இருக்கையில் அமர்ந்து மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் மேயர் தினேஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மேயர் தினேஷ்குமார் கவுன்சிலர்களுக்கு பரிசு கொடுத்து நன்றி தெரிவித்து பேசினார். தி.மு.க. மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மேயருக்கு வாழ்த்து தெரிவித்தனர். டாலர் சிட்டியான திருப்பூர் மாநகராட்சியின் 3வது மேயராக 44 வயதான தினேஷ்குமார் பொறுப்பேற்றுள்ளார். இவர் வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை மேயர் பாலசுப்பிரமணியம்
பின்னர் மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் மாமன்ற அரங்கில் நடைபெற்றது. கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் துணை மேயர் பதவிக்கு மனு செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக ஆணையாளர் அறிவித்தார். இதில் 40 தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் பங்கேற்றார்கள்.
திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க. தலைமை அறிவித்தபடி மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்வானார்கள். மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 18 கவுன்சிலர்களும் பா.ஜ.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்களும் பங்கேற்கவில்லை. மறைமுக தேர்தலையொட்டி மாமன்ற அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.