3 கிலோ நகைகள் ரூ23 லட்சம் கொள்ளை

3 கிலோ நகைகள் ரூ23 லட்சம் கொள்ளை

Update: 2022-03-04 13:23 GMT
திருப்பூரில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து 3 கிலோ நகைகள், ரூ.23 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த துணிகர சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை அடகுக்கடை
திருப்பூர் யூனியன் மில் ரோடு கே.பி.என். காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 49. இவர் கடந்த 15 ஆண்டுகளாக தனது வீட்டுக்கு முன்புறம் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களாக கே.பி.என். காலனியில் உள்ள வீட்டில் வசிக்காமல் அருகில் உள்ள என்.ஆர்.கே.புரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் நகை அடகு கடையை பூட்டிவிட்டு ஜெயக்குமார் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு லாக்கர் திறந்து கிடந்தது. அதில் இருந்த நகைகளும், ரேக்குகளில் இருந்த நகைகளும் காணவில்லை. இதனால் அவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் கமிஷனர் விசாரணை
நகை அடகு கடையில் இருந்து அவர் வீட்டுக்குள் செல்லும் வாசல் உள்ளது. வீட்டின் பின்புற இரும்பு கதவின் பூட்டை கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அடகு கடைக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு ஜெயக்குமார் புகார் தெரிவித்தார்.
மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் அனில்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
375 பவுன் நகை
நகை அடகு கடையில் கண்காணிப்பு கேமரா உள்ளது. ஆனால் வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் கருவியை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஜெயக்குமாரிடம் விசாரிக்கையில், நகை அடகு கடையில் 3 கிலோ நகைகள், 9 கிலோ வெள்ளி, ரூ.23 லட்சம் இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் யூனியன் மில் ரோடு வழியாக சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
திட்டமிட்டு கொள்ளை
நன்கு திட்டமிட்டு கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். யூனியன் மில் ரோடு, கே.பி.என். காலனி பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த நகை அடகு கடை உள்ள வீதி முக்கிய பிரமுகர்கள் குடியிருக்கும் பகுதியாகும். ஓட்டல் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். அந்த பகுதியில் நள்ளிரவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்