தலைவர் துணைத்தலைவராக திமுக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
தலைவர் துணைத்தலைவராக திமுக கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் வே.முருகன் முன்னிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு தலைவர் பதவிக்கான மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் ஆகியோர் உத்தரவின்படி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 13 பேரும், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டு கொண்டனர்.
இதனை தொடர்ந்து முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு கவுன்சிலர் எஸ்.சுந்தராம்பாள் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முடிவில் மற்ற யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால் முதலில் வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. கவுன்சிலர் எஸ்.சுந்தராம்பாள் பேரூராட்சி தலைவராக ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பேரூராட்சி தலைவராக எஸ்.சுந்தராம்பாள் பதவியேற்றுக்கொண்டார்.
துணைத்தலைவர் தேர்தல்
இதனை தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் 2.30 மணிக்கு துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் முத்தூர் பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் மு.க.அப்பு துணைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தி.மு.க. கவுன்சிலர், தி.மு.க. பேரூர் செயலாளர் மு.க.அப்பு பேரூராட்சி துணைத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து பேரூராட்சி துணைத்தலைவராக மு.க.அப்பு பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து முத்தூர் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சுந்தராம்பாள், துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.அப்பு ஆகியோர்களை பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், திருப்பூர் கிழக்கு மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.