தூத்துக்குடி மாநகராட்சி மேயராக என்.பி. ஜெகன் போட்டியின்றி தேர்வு
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக என் பி ஜெகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட என்.பி.ஜெகன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். ஜெனிட்டா செல்வராஜ் துணை மேயர் ஆனார்.
கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. 44 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.
இதைத்தொடர்ந்து 60 பேரும் கடந்த 2-ந்தேதி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலராக பதவியேற்றனர். இந்த நிலையில் தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக என்.பி.ஜெகன், துணை மேயர் வேட்பாளராக ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டனர்.
மறைமுக தேர்தல்
இதையடுத்து மேயர், துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. மேயரை தேர்வு செய்வதற்கான கூட்டம் காலை 9.30 மணிக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் கூட்டப்பட்டது. கூட்டத்தில் 52 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அ.தி.மு.க.வினர் 6 பேரும், சுயேச்சை ஒருவரும், தி.மு.க.வை சேர்ந்த ஒரு கவுன்சிலரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து மேயர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் தி.மு.க. மேயர் வேட்பாளரான ஜெகன் வேட்புமனுவை பெற்று பூர்த்தி செய்தார். அந்த மனுவில் 45-வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்மொழிந்தார். 39-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் வழிமொழிந்தார். அதன்பிறகு வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் பரிசீலனை செய்து, ஏற்றுக் கொண்டார்.
மேயர் போட்டியின்றி தேர்வு
அதே நேரத்தில் வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்கிறீகளா? என்று கேட்கப்பட்டது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடர்ந்து 9.38 மணிக்கு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஜெகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ அறிவித்தார். அப்போது கவுன்சிலர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மேயராக தேர்வு செய்யப்பட்ட ஜெகனுக்கு தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மேயராக தேர்வு செய்யப்பட்ட ஜெகன் மேயருக்கான அங்கியை அணிந்து கொண்டார்.
கனிமொழி எம்.பி. வாழ்த்து
இதைத்தொடர்ந்து 111 பவுன் தங்க ஆபரணம், வெள்ளி செங்கோல் ஆகியவற்றை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மேயர் ஜெகனின் தாய் எபனேசர் ஆசி வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன்பிறகு மேயர் அறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவரது இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அதில் அமர்ந்து பணிகளை தொடங்கினார்.
துணை மேயர்
மதியம் 2.30 மணிக்கு துணை மேயரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் தவிர 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் ஜெனிட்டா செல்வராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுவை 15-வது வார்டு கவுன்சிலர் இசக்கிராஜா முன்மொழிந்தார். 60-வது வார்டு கவுன்சிலர் பாலகுருசாமி வழிமொழிந்தார்.
தொடர்ந்து வேறு யாரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யாததால் ஜெனிட்டா செல்வராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சாருஸ்ரீ அறிவித்தார். இதையடுத்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கொண்டாட்டம்
மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் வாழைமர தோரணம் கட்டப்பட்டு இருந்தது. பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்கள் முழங்கவும், கரகாட்டம் நிகழ்ச்சியுடன் தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.
மறைமுக தேர்தலை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.