எங்களுக்கு மத்திய அரசு, இந்திய தூதரகம் உதவவில்லை; நாடு திரும்பிய கர்நாடக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைனில் இருந்து வெளியேற எங்களுக்கு மத்திய அரசு, இந்திய தூதரகம் உதவவில்லை என்று நாடு திரும்பிய கர்நாடக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

Update: 2022-03-03 21:17 GMT
பெங்களூரு: உக்ரைனில் இருந்து வெளியேற எங்களுக்கு மத்திய அரசு, இந்திய தூதரகம் உதவவில்லை என்று நாடு திரும்பிய கர்நாடக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

ரஷியா தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. முக்கிய கட்டிடங்கள், ரெயில் நிலையங்களை வெடிகுண்டு வீசி தகர்த்து வருகிறது. இதனால் உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி வருகிறது.

இதுவரை 12 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் உக்ரைனில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு வந்த கர்நாடக மாணவர்கள் சிலர் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தனர். இந்த நிலையில் மாணவர்கள் மத்திய அரசு, இந்திய தூதரகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

குறுந்தகவலுக்கு பதில் இல்லை

உக்ரைனில் இருந்து திரும்பிய பிரசாந்த் என்ற மாணவர் கூறும்போது, ‘நாங்கள் உக்ரைனில் இருந்து நாடு திரும்ப மத்திய அரசும், இந்திய தூதரகமும் எந்த உதவியும் செய்யவில்லை. அங்கு நான் கடும் சவாலை சமாளித்தேன். நாடு திரும்புவதற்காக ருமேனியா நாட்டின் எல்லையில் 1½ நாள் காத்து கிடந்தேன். மற்ற நாடுகளின் எல்லைகளுக்கு வரும் மாணவர்களை மட்டும் தான் இந்திய தூதரகத்தினர் மீட்டு விமானம் மூலம் அனுப்பி வைக்கின்றனர். உக்ரைனுக்குள் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார்.

அனீஸ் என்ற மாணவர் கூறும்போது, ‘உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் உதவவில்லை. உக்ரைனை விட்டு வெளியே வந்த பின்னர் தான் எங்களுக்கு தூதரகம் உதவி கிடைக்கிறது. இந்திய தூதரகத்திற்கு போன் செய்தால் அவர்கள் எடுப்பது இல்லை. குறுந்தகவல் அனுப்பினாலும் அதற்கு பதில் இல்லை. உக்ரைனில் மேற்கு பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை. கிழக்கு பகுதியில் சிக்கி தவிப்பவர்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

சோயப் என்ற மாணவர் கூறுகையில், உக்ரைனில் இருந்து நான் சொந்த பணத்தை கொடுத்து தான் தற்போது வந்து உள்ளேன். மத்திய அரசும், இந்திய தூதரகமும் எந்த உதவியும் செய்யவில்லை. உக்ரைனில் இருந்து இந்தியா வர ரூ.1½ லட்சம் செலவு செய்து உள்ளேன். போலந்து நாட்டின் எல்லையில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும். உக்ரைனுக்குள் சென்று நமது மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது

அகன்ஷா என்ற மாணவி கூறும்போது, பெரும் கஷ்டப்பட்டு தான் தாய் நாட்டிற்கு வந்து உள்ளோம். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் எங்களுக்கு அங்கு இருக்கும் போது எந்த உதவியும் கிடைக்கவில்லை. தற்போது என்னுடன் 5 பேர் வந்து உள்ளனர். நிறைய பேர் அங்கு உள்ளனர். எங்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடக்கிறது. இந்தியாவுக்கு திரும்பி செல்வது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. நான் திரும்பி வந்து விட்டேன். போலந்து, ஹங்கேரி, ருமேனியா நாட்டின் எல்லைகளில் சிக்கி தவிக்கும் மாணவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று கூறினார்.

உக்ரைனில் இருந்து திரும்பி ஹாவேரி மாணவா் லட்சுமி நாராயண் கூறும்போது, கார்கிவ், கீவ் நகரங்களை இன்னும் ரஷியா கைப்பற்றவில்லை. போர் தொடங்கும் என்று அறிந்ததும் பல்பொருள் அங்காடிக்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையானதை வாங்கி கொண்டேன். போர் தீவிரம் அடைந்ததும் ஹங்கேரிக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்து விட்டேன். நவீன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவது எளிதல்ல என்றார்.

மறுபிறவி

சிவமொக்காவை சேர்ந்த மாணவி மனிஷா கூறுகையில், நான் உக்ரைனில் கீவ் நகரில் சிக்கி இருந்தேன். எப்படி தப்பிப்பது என்றே தெரியவில்லை. அங்கிருந்து வெளியேற எங்களுக்கு வழி தெரியவில்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. போரையும் பொருட்படுத்தாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு லீவேவ் நகரை வந்தடைந்தோம். உக்ரைன் எல்லையில் இருந்து 20 கிலோ மீட்டர் நடந்து விமான நிலையத்துக்கு வந்தோம். நான் மறுபிறவி எடுத்துள்ளேன். கிழக்கு உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பாஸ்போர்ட்டை தவற விட்ட மங்களூரு மாணவி

தட்சிண கன்னட மாவட்டம் மங்களூரு அருகே தெரலேபயலு பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவர் உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்த வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவர் தங்கியிருந்த கல்லூரியின் அருகேயுள்ள கட்டிடத்தில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பதற்றம் அடைந்த அனிதா, சக மாணவர்களுடன் பதுங்கு குழியில் இருந்து தப்பி, ரெயில் வாயிலாக போலாந்துக்கு சென்றார்.

 அப்போது அங்கு வைத்து தனது பாஸ்போர்ட்டை தேடினார். அவருக்கு கிடைக்கவில்லை. கார்கிவ் பகுதியில் பாஸ்போர்ட்டை தவறவிட்டு வந்தது தெரியவந்தது. ஆனால் கார்கிவ் பகுதியில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் அவரால் செல்ல முடியவில்லை. இதனால் செய்வது அறியாது தவித்த அவர் உடனே இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கார்கிவ் நகரில் பாஸ்போர்ட்டை தவற விட்டதாகவும், விமானத்தில் பயணிக்க அனுமதி அளிக்கும்படியும் கூறினர். இதை ஏற்ற இந்திய தூதரக அதிகாரிகள் மாணவி அனிதாவுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் அனிதா நிம்மதி அடைந்தார்.

மேலும் செய்திகள்