ரெயில்வே கீழ் பாலத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
பேராவூரணி அருகே ரெயில்வே கீழ் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.
பேராவூரணி:
பேராவூரணி அருகே ரெயில்வே கீழ் பாலத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.
ரெயில்வே கீழ் பாலம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு அருகே ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட்டை ரெயில்வே நிர்வாகம் மூடிவிட்டு ரெயில்வே கீழ் பாலத்தை அமைத்தது. இந்த பாலம் முறையான வடிவமைப்பு இல்லாததால் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பாலத்தில் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாத அவலம் உள்ளது. இதனால் இந்த பாலத்தை பயன்படுத்தும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு வருகி்ன்றனர். இதையடுத்து ரெயில்வே கீழ் பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
போராட்டம்
இதையடுத்து ெரயில்வே கீழ் பாலம் அருகே உள்ள மற்றொரு இடத்தை மாற்றுப் பாதையாக அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வழியாகவே பஸ்கள், லாரி, டிராக்டர்கள் சென்று வந்தன. நேற்று திடீரென இந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என ெரயில்வே துறை சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ரெயில்வே கீழ் பாலத்தை சீரமைக்கக்கோரியும், மாற்றுப்பாதையை மூடுவதை கண்டித்தும்
போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் இருப்புப்பாதை முதுநிலை பகுதி பொறியாளர் பழனிவேல், இளநிலை பொறியாளர் பாலகுமாரன், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, பேராவூரணி வருவாய் ஆய்வாளர் முருகேசன், படப்பனார்வயல் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயபாஸ்கரன் (சொர்ணக்காடு), கணேசன் (வலப்பிரமன்காடு), விஜயகுமார் (மணக்காடு), பழனிமுருகன் (மாத்தூர் ராமசாமிபுரம்) உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு
இதுகுறித்து 2 நாளில் பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதில் உரிய முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நடைபெற இருந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.