தஞ்சையில் விற்பனைக்கு வந்த தர்ப்பூசணி

சீசன் தொடங்கியதால் தஞ்சைக்கு தர்ப்பூசணி விற்பனைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2022-03-03 20:41 GMT
தஞ்சாவூர்:
சீசன் தொடங்கியதால் தஞ்சைக்கு தர்ப்பூசணி விற்பனைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோடைகாலம்
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழஜூஸ், கரும்புச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்கி அருந்தி வருகிறார்கள். இது தவிர நீர்ச்சத்து நிறைந்த தர்ப்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றையும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகிறார்கள்.
தர்ப்பூசணி பழங்கள்
குறிப்பாக அதிக நீர்ச்சத்து கொண்ட தர்ப்பூசணி பழத்தை சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் தொடங்கி இருப்பதால் தஞ்சைக்கு அதிக அளவில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக தஞ்சைக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வந்த குவின்றன. தஞ்சையில் பழைய கோர்ட்டு சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகிலும், சிவகங்கை பூங்கா, சீனிவாசபுரம், மணிமண்டபம், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சை புறவழிச்சாலை பகுதிகளிலும் அதிக அளவில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் அதிகஅளவில் பழங்களை வாங்கி செல்கின்றனர்.
2 ஆண்டுகளாக பாதிப்பு
இது குறித்து பழ வியாபாரி பரமசிவம் கூறுகையில் கடந்த 2 ஆண்டுகளாக தர்ப்பூசணி பழங்கள் வாங்கி கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை செய்ய முடியாமல், அழுகி பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்