இளம்பெண் பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கடையம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
நெல்லை:
கடையம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
இளம்பெண் பாலியல் பலாத்காரம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). கூலி தொழிலாளி. ஆழ்வாநேரி பகுதியை சேர்ந்தவர் உடையார் (38). இவர்கள் 2 பேரும் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி கடையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆறுமுகத்தை கைது செய்தனர். உடையார் தலைமறைவாக உள்ளார்.
10 ஆண்டு சிறை தண்டனை
இதுதொடர்பான வழக்கு நெல்லை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மேலும் அபராதத்தில் ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜராகி வாதாடினார்.
மற்றொரு வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் அதிசயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் மகன் ராஜேஷ் (24). டிரைவரான இவர் கடந்த 2018-ம் ஆண்டு திசையன்விளை பகுதியை சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட ராஜேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜீவரேகா ஆஜராகி வாதாடினார்.