அரசு திட்டத்திற்கு பயன்படுத்திய கார் பறிமுதல்
போக்குவரத்து விதியை மீறி அரசு திட்டத்திற்கு பயன்படுத்திய காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கார்களை சிலர் போக்குவரத்து விதிகளை மீறி சுற்றுலா பயன்பாட்டுக்காக இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் விழுப்புரம் நகர பகுதிகளில் நேற்று திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் தமிழ்நாடு அரசு ஸ்டிக்கர் மற்றும் மக்களை தேடி மருத்துவம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்த காரை அதிகாரிகள் நிறுத்தி அதன் வாகன சான்றுகளை சரிபார்த்தபோது, சொந்த பயன்பாட்டுக்காக வாங்கிய கார், அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு வாடகை காராக பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. உடனே அந்த காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த கார் வாடகைக்கு ஓட்ட முறையாக டி-போர்ட் உரிமம் பெற்றுக்கொண்டு ஓட்டுவதுதான் போக்குவரத்து விதிமுறைக்கு உட்பட்ட செயலாகும். அரசு திட்டத்திற்கு பயன்படுத்திய காரை முறையாக வாடகைக்கு ஓட்டுவதற்கான உரிமம் பெற உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.