ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கூறுவதில் உண்மை இல்லை சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ. உறுதி

ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. கூறியுள்ளது.

Update: 2022-03-03 19:16 GMT
கோப்பு படம்
மும்பை, 
ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. கூறியுள்ளது.
காஷ்மீரில் ஷீனா போரா
பெற்ற மகளை கொலை செய்த வழக்கில் பிரபல தொலைக்காட்சி நிர்வாகி இந்திராணி முகர்ஜி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் சமீபத்தில் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 அந்த மனுவில், கொலை செய்யப்பட்ட ஷீனா போராவை போன்ற பெண்ணை காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பார்த்ததாக மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு வந்த முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஷா கோர்கே தன்னிடம் தெரிவித்ததாக கூறியிருந்தார். 
உண்மையில்லை
இந்த மனு குறித்து சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், " விரிவான விசாரணைக்கு பிறகு இந்திராணி முகர்ஜி, சஞ்சீவ்கன்னா, ஷியாம்வர் ராய், பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை, 2 துணை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து உள்ளோம். இந்திராணி முகர்ஜியின் மனுவில் எந்த உண்மையும் இல்லை. விசாரணையை தாமதப்படுத்தவே இதுபோன்ற ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளார். ஷீனா போரா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதால், அவர் உயிருடன் காஷ்மீரில் வாழ சாத்தியமில்லை. இது இந்திராணி முகர்ஜி அல்லது ஆஷா கோக்ரேவால் கூறப்பட்ட கட்டுக்கதை மட்டுமே." என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்