இடையாத்தூர் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் சீறிப்பாய்ந்தன; 60 பேர் காயம்
பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 800 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் உள்பட 60 பேர் காயம் அடைந்தனர்.
காரையூர்,
ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள இடையாத்தூர் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.
இதையொட்டி புதுக்கோட்டை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து 800 காளைகளுக்கு அனுமதி வழங்கினர். மாடுபிடி வீரர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து 305 பேரை களத்தில் இறங்க அனுமதித்தனர்.
60 பேர் காயம்
ஜல்லிக்கட்டை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இலுப்பூர் ஆர்.டி.ஓ. தண்டாயுதபாணி, பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் வாடிவாசலில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்து விட்டு துள்ளிக்குதித்து சென்றன. இதில் மாட்டின் உரிமையாளர்கள் 22 பேர், மாடுபிடி வீரர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 26 பேர் உள்பட மொத்தம் 60 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
பரிசு பொருட்கள்
இதையடுத்து, திருப்பத்தூரை சேர்ந்த பவிகரன் (வயது 22), திண்டுக்கல் பாரதி (23), திருக்கோஷ்டியூர் சுப்பையா (50), கொன்னையம்பட்டி அண்ணாமலை (25), பனையப்பட்டி ராமு (31) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் குடுமியான்மலை விக்னேஷ் (18), கிள்ளனூர் ராஜ்குமார் (20) ஆகியோர் பொன்னமராவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, ரொக்கப்பணம், பீரோ, கட்டில், குக்கர், குத்துவிளக்கு, சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.