பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுகிறார்.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு ம.தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுகிறார்.
பரமக்குடி
பரமக்குடி நகராட்சியானது 36 வார்டுகளை கொண்டது. இதில் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் தி.மு.க. 19 வார்டுகளிலும், அ.தி.மு.க 10 வார்டுகளிலும், ம.தி.மு.க. 2 வார்டுகளிலும் பா.ஜ.க. 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே தி.மு.க. 53 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பரமக்குடி நகராட்சியை கைப்பற்றியுள்ளது.
தற்போது நகராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 24-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பரமக்குடி தெற்கு நகர் பொறுப்பாளர் சேது கருணாநிதி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஒருமுறை அவரது மனைவி சுதா ராணி நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2011-ல் சேது கருணாநிதி நகர் மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்துள்ளார்.
தற்போது நகர்மன்ற தலைவர் பதவிக்கு சேதுகருணாநிதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.இவருக்கு மனோரஞ்சன் என்ற மகன் உள்ளார்.
ம.தி.மு.க.வுக்கு துணைத்தலைவர் பதவி
அதேபோல் நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ம.தி.மு.க.வைச் சேர்ந்த 33-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள குணசேகரன் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே 2 முறை நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் ம.தி.மு.க. பரமக்குடி நகர செயலாளராக இருந்து பின்பு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து தற்போது மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு விஜயலெட்சுமி என்ற மனைவியும் ஹாசினி என்ற மகளும் ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.