ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு
ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது
.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் தி.மு.க. 23 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் 7-வது மற்றும் 29-வது வார்டுகளில் போட்டியின்றி வெற்றிபெற்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், பா.ஜ.க. அ.ம.மு.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 2-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். நகராட்சி ஆணையாளர் சந்திரா, 33 வார்டு கவுன்சிலர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தநிலையில் தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் ராமநாதபுரம் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளராக வடக்கு நகர் செயலாளர் ஆர்.கே.கார்மேகம் (வயது 58) அறிவிக்கப்பட்டு உள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களித்து இவரை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். இவர் கடந்த 1989 முதல் தி.மு.க.வில் கட்சிப்பணியாற்றி வருகிறார். 1995 முதல் ராஜசூரியமடை கிளை செயலாளர் ஆகவும், 1999 முதல் ராமநாதபுரம் நகர் தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராகவும், 2011 முதல் தற்போது வரை நகர் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 2003-ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் ராமநாதபுரம் நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பாராட்டி அப்போதைய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கார்மேகத்திற்கு வாழ்த்துமடல் எழுதியிருந்தது முரசொலியில் பிரசுரமாகியிருந்தது. அதனை தொடர்ந்து 2006-ல் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் 22-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். தற்போது 22-வது வார்டு மறுவரையறை செய்யப்பட்டு 30-வது வார்டாக மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு மாரி என்ற மனைவியும் சுதா, காயத்ரி என்ற 2 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். இதில் காயத்ரி நடந்து முடிந்த தேர்தலில் 29-வது வார்டில் தி.மு.க.சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தந்தை, மகள் இருவரும் கவுன்சிலராக உள்ள நிலையில் கார்மேகம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேசுவரம்
ராமேசுவரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அ.தி.மு.க 6 இடங்களிலும் சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.அதுபோல் அ.தி.மு.க.வில் வெற்றி பெற்றிருந்த 6 கவுன்சிலர்களில் 3 பேர் தி.மு.க கட்சியில் இணைந்தனர். இதை தவிர சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேரும் தி.மு.க வில் இணைந்தனர்.
இதனால் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களையும் சேர்த்து 18 கவுன்சிலர்களை கொண்டு தனி மெஜாரிட்டி ஆக உள்ளது.
இந்தநிலையில் ராமேசுவரம் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகின்றது. முதலாவதாக காலை 10 மணிக்கு நகரசபை தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. கவுன்சிலர்கள் மூலம் நடைபெறும் இந்தத் தேர்தலில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பிற்பகலில் நகராட்சி ஆணையாளர் மூலம் அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே ராமேசுவரம் நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க கட்சியின் நகரச்செயலாளர் நாசர்கான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நகரசபை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாசர்கான் கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க கட்சியில் இருந்து வருகின்றார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மாணவரணி அமைப்பாளர், நகர இளைஞரணி அமைப்பாளர், வார்டு கழகச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ராமேசுவரம் நகர்கழகச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார். தற்போது நகரசபை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஜெனிபாராணி மனைவியும் மற்றும் 5 குழந்தைகளும் உள்ளனர்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. 13 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும், எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும்,, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை 5 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.இதில் 11-வது வார்டில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செகானஸ் ஆபிதா கீழக்கரை நகராட்சி புதிய தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரது குடும்பத்தினர் தொடர்ந்து தி.மு.க.வில் பல்வேறு கட்சி பதவிகளை வகித்தவர்கள்.