தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
போளூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருவண்ணாமலை
போளூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கட்டிபூண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 65), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
இவருக்கு அந்த பகுதியில் சுமார் 4½ ஏக்கர் நிலம் உள்ளது. இவரது நிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காசி என்பவர் விவசாயம் செய்து வந்துள்ளார். காசி போலி பத்திரம் தயார் செய்து ராஜகோபாலின் நிலத்தை அவரது பெயரில் எழுதி உள்ளார்.
இதையறிந்த ராஜகோபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ராஜகோபாலின் கையெழுத்து தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ராஜகோபால் நீதிமன்றத்திற்கு வராமல் தடுக்க அவரை கடத்த காசி திட்டமிட்டார்.
இதையடுத்து காசி, அவரது மகன் பாலமுருகன், ரெண்டேரிபட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஏழுமலை, மாட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி சீனு என்ற சீனுவாசன் ஆகியோருடன் இணைந்து ராஜகோபாலை கடத்தி சென்று கொலை செய்தனர்.
அப்போது அதை அறியாத ராஜகோபாலின் குடும்பத்தினர் போளூர் போலீஸ் நிலையத்தில் ராஜகோபாலை காணவில்லை என்று புகார் செய்தனர். போலீசாரின் விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டதால் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டி மனு அளித்தனர்.
இரட்டை ஆயுள்
இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் செஞ்சி அருகில் மைலத்தை அடுத்த கூட்ரோடு பாலத்தின் அடியில் ராஜகோபால், காசியின் தரப்பினரால் கடத்தி சென்று கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜகோபாலின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தீர்ப்பு கூறினார். அதில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக காசி, அவரது மகன் பாலமுருகன், ஏழுமலை, சீனு என்ற சீனுவாசன் ஆகிய 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், பாலமுருகனுக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.16 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.