குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம்

ஜாப்ராபாத் பஞ்சாயத்தில் குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-03 18:35 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அமீர்பாஷா உள்ளார். 

கடந்த 10 நாட்களாக ஊராட்சி வார்டு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் வாராததாலும், தேங்கி உள்ள குப்பைகள் அகற்றாததாலும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஊராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட அரசு சார்பில் இடத்தை ஒதுக்க வேண்டும், எனக் கோரிக்கையை முன் வைத்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அங்கு வந்த போலீசாரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்