வங்கி பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்; போலீஸ் சூப்பிரண்டு தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவாா்்கள், எனப் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-03-03 18:35 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவாா்்கள், எனப் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.

ஆலோசனைக்கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா வரவேற்றார். சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜி, திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் 150-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சைபர் குற்றங்கள் குறைய ஏதுவாக வங்கி வளாகத்தில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஏ.டி.எம். எந்திரங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஏ.டி.எம். மையங்களின் கதவுகளில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டிய அறிவுரைகள், சைபர் குற்றங்கள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு விவரங்கள், இணையவழி நிதி மோசடி குற்றங்களில் புலன் விசாரணையின் பொருட்டு வங்கி அதிகாரிகளிடம் இருந்து கோரப்படும் தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

வங்கிகள் முன்பு கண்காணிப்பு கேமராக்கள்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்போது சைபர் குற்றங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் 5 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் அதிகரிக்கும். பொதுமக்கள் போக்குவரத்தும் அதிகரிக்கும். இதன் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்கள், சைபர் குற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக வங்கிகளுக்கு வரும் நபர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடாதவாறு தடுக்கும் வகையில் அனைத்து வங்கிகளும், வங்கியின் முன்பு போக்குவரத்து, சாலைகள் தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். 

அவ்வாறு பொருத்தினால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை  விரைந்து பிடித்து நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு வங்கி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

துண்டு பிரசுரம் வினியோகம்

அனைத்து வங்கி அதிகாரிகளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்