ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
வேதாரண்யம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ரெயில்வே சுரங்கப்பாதை
வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் செண்பகராயநல்லூர் மருதூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலை இந்த வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்கின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி செண்பகராயநல்லூர்- மருதூர் இணைப்பு சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அந்த பகுதி கிராம மக்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், சுரங்கப்பாதை அமைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அகல ரெயில்பாதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் இன்னும் சுரங்கப்பாதை அமைக்கவில்லை. சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை என்றால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. செண்பகராயநல்லூர்- மருதூர் இணைப்பு சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வேதாரண்யம் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.