அதிக வட்டி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ 13 லட்சம் மோசடி

அதிக வட்டி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-03 17:19 GMT
கோவை

அதிக வட்டி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தனியார் நிறுவன ஊழியர் 

கோவை நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் குமணன் (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் இருந்த லிங்க்கை அவர் ஓபன் செய்தார். 

அப்போது சில நிமிடங்களில் அவருடைய செல்போனுக்கு ஒரு  அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், தாங்கள் மருத்துவ உபகரணங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், இந்த தொழிலில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் கூறினார்கள். 

தொடர்ந்து பேசிய நபர்கள், நீங்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 60 நாட்களுக்குள் ஊக்கத்தொகை தருவதாகவும் கூறினார்கள். 

ரூ.13 லட்சம் மோசடி

இதை உண்மை என்று நம்பிய குமணன், அவர்கள் கூறியபடி ரூ.12 லட்சத்து 95 ஆயிரத்து 185-ஐ ஆன்லைன் மூலம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி கூடுதல் வட்டி மற்றும் ஊக்கத்தொகை கொடுக்க வில்லை.  அத்துடன் அவர்கள் பேசிய எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த குமணன், இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார். மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தியில் லிங்க் இருந்தால் அதை ஓபன் செய்ய வேண்டாம் என்றும், முகநூலில் அடையாளம் தெரியாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்