பழனி முருகன் கோவிலுக்கு பாதவிநாயகர் கோவில் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி
பழனி முருகன் கோவிலுக்கு பாதவிநாயகர் கோவில் வழியாக பக்தர்கள் செல்ல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
பழனி:
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், கொரோனா பரவல் மற்றும் மங்கம்மாள் மண்டப மராமத்து பணி காரணமாக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.
அதன்படி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவு அரங்கம் வழியாக யானைப்பாதையிலும், கோவிலில் இருந்து கீழே வரும் பக்தர்கள் படிப்பாதை, பாதவிநாயகர் கோவில் வழியிலும் வருகின்றனர்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் நிலவுகிறது. மேலும் மங்கம்மாள் மண்டப மராமத்து பணி முடிவடைந்தது. எனவே பக்தர்களின் நலனுக்காக அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பக்தர்கள் பாதவிநாயகர் கோவில், மங்கம்மாள் மண்டபம், யானைப்பாதை வழியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தரிசனம் முடித்து மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை, மங்கம்மாள் மண்டபம் வழியே வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.