கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்து தம்பதி பலி

கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்து தம்பதி பலி

Update: 2022-03-03 14:53 GMT
முத்தூர் அருகே சாலையோர கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்து தம்பதி பலியானார்கள். அவர்களது மகள் உயிர் தப்பினாள். 
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
பந்தல் அமைப்பாளர்
கரூர் மாவட்டம் புகளூர் தாலுகா தென்னிலை மேற்கு கிராமம் ஆவுத்திபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் வயது 52. மேடை, பந்தல் அமைப்பாளர். இவரது மனைவி பானுமதி 48. இவர்களது ஒரே மகள் அகல்யா 12
நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே சின்னமுத்தூர் செல்வக்குமாரசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அருகில் உள்ள மோளக்கவுண்டன்புதூரில் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வடிவேல் மேடை, பந்தல், மின்னொளி அமைத்து கொடுத்தார். உதவிக்கு தனது மனைவி, மகளையும் அழைத்து சென்றிருந்தார்.
பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த உடன் மேடை, பந்தலை பிரித்து பொருட்களை ஒரு லாரியில் ஏற்றி வடிவேல் அனுப்பி வைத்தார். பின்னர் நேற்று காலை 6 மணி அளவில் சரக்கு ஆட்டோவில் ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு மனைவி, மற்றும் மகளை உடன் அழைத்துக்கொண்டு வடிவேல் ஊருக்கு புறப்பட்டார்.
கிணற்றில் பாய்ந்த ஆட்டோ
சரக்கு ஆட்டோ முத்தூர்-ஊடையம் சாலை சென்னாக்கல்மேடு பஸ் நிறுத்தம் அருகில் காலை 7 மணிக்கு வந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 60 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. 
கிணற்றின் தடுப்புச்சுவரில் மோதியபோது ஆட்டோவின் முன் பக்க கண்ணாடி உடைந்ததால் சிறுமி அகல்யா மட்டும் அதன் வழியாக வெளியேறி மேலே வந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டு அபயக்குரல் எழுப்பினார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது சிறுமி கிணற்றின் விளிம்பை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவளை மீட்டனர். அப்போது தனது தாயும், தந்தையும் தண்ணீருக்குள் ஆட்டோவுடன் மூழ்கி விட்டதாக அவள் தெரிவித்தாள். இதையடுத்து சிறுமியை உடனே முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
கிரேன் மூலம் மீட்பு
தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிணற்றில் 60 அடி வரை நீர் நிரம்பி இருந்ததால் தம்பதியை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு கிரேன் கொண்டு வரப்பட்டு, 3 மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு வடிவேல்-பானுமதி தம்பதி உடல் மீட்கப்பட்டது. பின்னர் ஜெனரேட்டரும், சரக்கு ஆட்டோவும் மீட்கப்பட்டது. 
பின்னர்  இவருரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தாய்- தந்தையின் உடலை பார்த்து சிறுமி அகல்யா கதறி அழுதது அங்கிருந்தோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மேலும் செய்திகள்