போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு
கிணத்துக்கடவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
15 வயது சிறுமி கர்ப்பம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடந்த 2021-ம் ஆண்டு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, திருமணம் செய்து கொண்டார். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிறுமி மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்து உள்ளது.
ஜாமீனில் வெளியே வந்தார்
இந்தநிலையில் சுப்பிரமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று முன்தினம் சுப்பிரமணி மற்றும் அவர் திருமணம் செய்த சிறுமி, குழந்தைக்கு கோவையில் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் சுப்பிரமணி ஊரில் கோவில் திருவிழா என்பதால் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சுப்பிரமணி மறறும் அவரின் சகோதரியின் கணவர் ராஜா இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு, அந்த சிறுமியின் உறவினர் வீடுவழியாக வந்து உள்ளார்கள்.
அாிவாள் வெட்டு
அப்போது குழந்தை பெற்ற சிறுமியின் உறவினரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் சஞ்சீவகன் (27) என்பவர் சுப்ரமணியம் கண்டதும் ஆத்திரமடைந்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சஞ்சீவகன் அங்கு கிடந்த அரிவாளை எடுத்து சுப்பிரமணியின் தலையில் பலமாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சஞ்சீவகன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊழியர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் -இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை அரிவாளால் வெட்டிய சஞ்சீவகனை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் கோவையில் ஈச்சனாரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.
போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.