திருப்பூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

திருப்பூரில் ஸ்கேட்டிங் பயிற்சிக்காக சென்ற 5 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-03-03 14:41 GMT


கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜித் பாரியாரத் வயது 43. இவரது மனைவி ராஜஸ்ரீ. இவர்களது மகன் வைபவ் ஸ்ரீஜித் 5 ஸ்ரீஜித் பாரியாரத் தனது குடும்பத்துடன் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.  

அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஸ்ரீஜித் பாரியாரத் மேலாளராகவும், அவருடைய மனைவி மெர்ச்சன்டைசராகவும் வேலை பார்த்து வருகின்றனர். வைபவ் ஸ்ரீஜித் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1 ம் வகுப்பு படித்து வந்தான். மேலும் டி.டி.பி.மில் ரோடு 15 வேலம்பாளையம் ரிங்ரோடு சந்திப்பில் உள்ள ஸ்கேட்டிங் மற்றும் நீச்சல் பயிற்சி மையத்தில் சிறுவன் வைபவ் ஸ்ரீஜித் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்துள்ளான். இதற்காக தினமும் மாலை 1 மணி நேரம் வைபவ் ஸ்ரீஜித்தை அவருடைய தந்தை பயிற்சி மையத்தில் விட்டு, பின்னர் பயற்சி முடிந்ததும் அழைத்து செல்வார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வழக்கம்போல வைபவ் ஸ்ரீஜித்தை அவருடைய தந்தை ஸ்கேட்டிங் பயிற்சிக்காக மையத்தில் விட்டு சென்றார். இரவு 7.30 மணிக்கு மகனை அழைக்க சென்றபோது பயிற்சி மையத்தில் அங்கு சிறுவன் இல்லாதது கண்டு சிறுவனின் தந்தை அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பயிற்சி மையத்தை நடத்தி வரும் ஜோதிபாசு என்பவரிடம் சிறுவன் குறித்து கேட்டார்.
அப்போது, சிறுவனை காணாததால் அவரும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயிற்சியாளர் ஜோதிபாசு, சிறுவனின் தந்தை ஸ்ரீஜித் பாரியாரத் மற்றும் பயிற்சிக்காக வந்த அனைவரும் சேர்ந்து சிறுவன் வைபவ் ஸ்ரீஜித்தை பயிற்சி வளாகம் முழுவதும் தேடினார்கள். 

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு சென்று பார்த்தபோது சிறுவன் வைபவ் ஸ்ரீஜித் அங்கு தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பதறியடித்தபடி சிறுவனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் வைபவ் ஸ்ரீஜித் பரிதாபமாக உயிரிழந்தான். அவனுடைய உடலை பார்த்து பெற்றோர் மற்றும் பயிற்சிக்கு வந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. 

இதுகுறித்து சிறுவனின் தந்தை ஸ்ரீஜித் பாரியாரத் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு வரும் குழந்தைகள் நீச்சல் குளத்திற்கு அருகே செல்லாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜோதிபாசு மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பயிற்சி மைய உரிமையாளர் ஜோதிபாசுவை கைது செய்தனர். திருப்பூரில் ஸ்கேட்டிங் பயிற்சிக்காக சென்ற 5 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்