சின்னமனூர் ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணைக்க கோரி தீர்மானம்
சின்னமனூர் ஒன்றிய ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வை இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சின்னமனூர்:
சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மார்க்கையன்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அ.தி.மு.க. சந்தித்து வரும் தொடர் தோல்வியை இனிவரும் காலங்களில் சரிசெய்ய வேண்டுமென்றால் சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைய வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த தீர்மானம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் எல்லப்பட்டி முருகன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு..க.வுடன் அ.ம.மு.க.வை இணைக்க வேண்டும் என ஏற்கனவே பெரியகுளத்தில் நடந்த கூட்டத்தில் தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் அதே கருத்தை வலியுறுத்தி சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.